உத்தர பிரதேசத்தில் ரவுடிகள் அட்டூழியம் – டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேயை டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரவுடி விகாஸ் துபே இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது போலீசார் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது, ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 காவலர்களை ரவுடி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில டிஜிபியிடம் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டது கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்விடத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.