கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் மரியாதை ..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றிய பாலமுரளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 5-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் 2 நாளில் காய்ச்சல் அதிகமான நிலையில் கடந்த 7-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று காலை முதல் பாலமுரளியின் உடல் நிலை மோசமானது. சிகிச்சை பலனின்றி இன்று மாலை பாலமுரளி உயிரிழந்தார்.சென்னை காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் பலியாக ஆய்வாளர் மரணம் அமைந்துள்ளது. அவரது மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாலமுரளியின் உடல் வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தியுடன் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இறுதியில் தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி, காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பாலமுரளி வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக காவல்துறை அதிகாரி ஒருவர் முதன்முறையாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.