குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குவார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள். பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, சமூக சேவைஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதிபத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், 5 பேருக்கு பத்மவிபூஷண், 13 பேருக்கு பத்மபூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பெண்கள். 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 16 பேருக்கு மறைவுக்குபிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
5 பேருக்கு பத்ம விபூஷண்:இந்தி நடிகர் தர்மேந்திரா (மறைவு), உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், வயலின் கலைஞர் என்.ராஜம், பி.நாராயணன் (இலக்கியம், கல்வி), கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மறைவு) ஆகிய 5 பேர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
13 பேருக்கு பத்ம பூஷண்: பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, நடிகர் மம்முட்டி, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, பியூஷ் பாண்டே (மறைவு), எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், சதாவதனி ஆர்.கணேஷ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), தொழிலதிபர் உதய் கோட்டக், வி.கே.மல்ஹோத்ரா (மறைவு), வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
113 பேருக்கு பத்மஸ்ரீ: நடிகர் மாதவன், மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தி நடிகர் சதிஷ் ஷா (மறைவு), கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ஹாக்கி வீராங்கனை சவிதா பூனியா, புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேல் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 14 பேருக்கு..தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பத்ம விபூஷண், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பத்மஸ்ரீ விருதை 2 பேர் பங்கிட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்.
பத்ம பூஷண்: கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி (மருத்துவம்), எஸ்கேஎம். மயிலானந்தன் (சமூக சேவை).
பத்மஸ்ரீ: கர்னாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் (கலை), முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே (மருத்துவம்), கே.ராமசாமி (அறிவியல், பொறியியல்), முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் (குடிமைப்பணி), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), ஆர்.கிருஷ்ணன் (கலை – மறைவு), ராஜாஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), எழுத்தாளர் சிவசங்கரி (இலக்கியம், கல்வி), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (கலை), சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி (அறிவியல், பொறியியல்) ஆகியோர் விருது பெறுகின்றனர்.

பத்மபூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்:-
தமிழகத்தைச் சேர்ந்த 14 பேருக்கு பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு எஸ்கேஎம் குழும நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் எஸ்கேஎம். மயிலானந்தனின் சமூக சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இவர் 2013-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1945-ல் பிறந்த மயிலானந்தன் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 1983-ல் கோழிப்பண்ணையாளர்கள் நலச் சங்கத்தைத் தொடங்கிய இவர், நவீன கிராமப்புற சந்தைப்படுத்தல் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரைச் சேர்ந்த சாமிநாதன்(81), தரும்புரம் ஆதீனத்துக்கு உட்பட்ட குமரக்கட்டளை தேவஸ்தானத்தில் ஓதுவார் பணியைத் தொடங்கினார். திருத்தணி முருகன் கோயிலில் 1974 முதல் 2000 வரை 26 ஆண்டுகள் ஓதுவாராகப் பணியாற்றிய இவர், பின்னர் விருப்ப ஓய்வுபெற்று பல்வேறு கோயில்களில் ஓதுவாராகப் பணிபுரிந்தார்.
தற்போது தருமபுரம் ஆதீன தேவார பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வெள்ளரிக்கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணன். ஆலு குரும்பர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான இவர் ‘கிட்னா’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
30 ஆண்டுகளாக பழங்குடியின பாரம்பரியக் கலையை பிரபலப்படுத்திய இவர், பழங்குடியினரின் வாழ்வியலை ஓவியங்களாக வடித்துள்ளார். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜா ஸ்தபதி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் சிலைகளை உருவாக்கி வருகிறார். கடந்த ஆண்டு 13.6 அடி உயர நர்த்தன நடராஜர் சிலையை வடிவமைத்தார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 14 அடி உயர நாகா பரணத்தையும் இவர் உருவாக்கி உள்ளார். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இவர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.
தேசிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள ராஜா ஸ்தபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பூர்ணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிலம்பாட்டக் கலைஞர் பழனிவேல்(53), 18 வயதில் தெருக்கூத்துக் கலைஞராக கலைத் துறையில் நுழைந்தவர்.
தொடர்ந்து, சிலம்பாட்டம் மற்றும் காளியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுபுறக் கலைகளை கற்ற இவர், பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 10 நாடுகளில் சிலம்பப் பயிற்சி அளித்துள்ளார்.
பல்வேறு போட்டிகளிலும் வென்றுள்ள இவருக்கு 2012-ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தற்போது இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவத்சலம் அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞராகப் பணியாற்றியவர்.
1992-ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் மிருதங்கம் இசைத்தார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இவர் ஏற்கெனவே கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது பக்தவத்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியரும், புகழ்பெற்ற கால்நடை மருத்துவருமான ந.புண்ணியமூர்த்தி(68), தஞ்சை கால்நடை மருத்துவப் பல்கலை.யில் பணியாற்றியவர்.
கால்நடைகளுக்கான பல்வேறு நோய்களுக்குச் சித்த மருந்து மற்றும் வீட்டு வைத்திய முறைகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளார். மேலும், கால்நடை உரிமையாளர்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி, பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து: பத்ம விருதாளர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த கவுரவம், வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வழங்குவார்: பத்ம விருதுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.

Leave your comments here...