அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்..? – தவெக தலைவர் விஜய்

Scroll Down To Discover
Spread the love


நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்? என தவெக தலைவர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் விஜய் பேசியதாவது:

“நமது அரசியல் பயணத்தில் இது மிக மிக முக்கியமான காலகட்டமாகும். நான் ஏன் இதை அழுத்தமாக சொல்கிறேன் என்றால் அழுத்தத்துக்கு அடங்கி போகும் ஆட்கள் நாம் இல்லை. இது நம்மிடம் நடக்கவே நடக்காது. ‘அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டீர்கள்?’ என்றால், ‘அழுத்தம் இருக்கிறது’. ஆனால் அது நமக்கு இல்லை மக்களுக்குதான்.

தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பாஜகவுக்கு அடிமையாகதான் இருந்தனர். அவர்களை நம்பி நமக்கு எந்தப் பயனும் இல்லை. இப்போது ஆட்சியில் உள்ள திமுக அரசை நம்பியும் நமக்கு பயன் இல்லை. ஏனெனில் இவர்கள் மறைமுகமாக சரண்டர் ஆகியுள்ளனர். அவர்கள் வேஷம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக ‘கலர் கலரா’, கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.

‘இவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே. நமக்காக உண்மையாக உழைப்பதற்கு யாராவது வந்து விட மாட்டார்களா’ என்று வெளியில் சொல்ல முடியாத அழுத்தத்தில் மக்கள் உள்ளனர். இதனால் மக்கள் இப்போது தவெகவை நம்புகிறார்கள். அதனால்தான் இது நமக்கு மிக முக்கிய காலக்கட்டம் என்று சொன்னேன்.

தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு யூகங்கள் நடந்து வருகிறது. விஜய் உடன் யார் வருவார்கள்? என்று நம்மை குறைத்து மதிப்பிட்டு பேசி வருகின்றனர். இது நமக்கு புதிது அல்ல. முப்பது ஆண்டுகளாக இதை நாம் எதிர்கொண்டு வருகிறோம். மக்கள் நமக்கென ஒரு இடத்தை கொடுத்துள்ளனர். எனது கேரியரின் உச்சத்தை மக்கள் கொடுத்துள்ளனர். நம்மை நம்பும் மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இப்போது அது எனது குணாதிசியமாக மாறிவிட்டது.

இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வந்த பிறகும் சரி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி, ஆளும் கட்சி, ஆண்ட கட்சி போல ஊழல் என்பதை செய்ய மாட்டோம். ஊழல் கரை இல்லாத ஆட்சி நடைபெறும். இது சினிமா கதை அல்ல. ஒரே நாளில் மாற்றம் நடைபெறாது. ஆனால், எதற்கும் ஆசைப்படாத ஒருவன் அரசியலுக்கு வரும் போது ஊழல் இருக்காது.

அதனால் தீய சக்தி மற்றும் ஊழல் சக்தி என இரண்டு பேரும் தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடாது. இந்த கட்சிகளை எதிர்க்கும் பலம் நம்மிடம்தான் உள்ளது. நீங்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும், என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போகவும், அடிமையாக இருக்கவும் நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம்.

மக்களுக்கு என் மீது மட்டும் நம்பிக்கை இருந்தால் போதாது. நம் உடன் பயணிக்கும் எல்லோர் மீதும் அந்த நம்பிக்கை வேண்டும். அது தொடர வேண்டும். எல்லோரும் உண்மையாக உழைக்க வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் நமது அரசியலில் சமரசம் செய்யக் கூடாது. நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, உழைக்க வேண்டும்.

மக்கள் நமக்காக வாக்களிப்பார்கள், வெற்றி பெறச் செய்வார்கள். அதில் மாற்று கருத்து இல்லை. ‘மக்களிடம் செல்’ என அண்ணா சொன்னதை நாம் பின்பற்ற வேண்டும். அண்ணா தொடங்கிய கட்சியும், அண்ணா பெயரில் உள்ள கட்சியும் அவரை மறந்து பல வருடம் ஆகிவிட்டது. நாம் அவரை மறக்கக் கூடாது. மக்களிடம் செல்ல வேண்டும், மக்களுடன் இருக்க வேண்டும், மக்களுக்காகவே இருக்க வேண்டும். அதற்காகதான் இந்த கூட்டம்.

வாக்குச்சாவடி என்பது நமக்கு ஜனநாயகக் கூடம். அங்கு ஜனநாயகம் களவு போகக்கூடாது. ஒவ்வொரு வாக்கையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் உள்ள வாக்கும் நமக்கானது என்பதை உறுதி செய்யுங்கள். தமிழகத்தில் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் வேறு வேறு கட்சியில் இருந்தாலும் இந்த விஜய் அவர்களின் வீட்டில் ஒருவனாக வாழ்ந்து வருகிறேன். அவர்கள் நம்மோடு இருக்க முடிவு செய்து விட்டார்கள். அவர்களை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து, நமது ‘விசில்’ சின்னத்துக்கு வாக்களிக்க செய்யுங்கள்.

ஒன்றியம், நகரம், ஊராட்சி என இங்கு வந்துள்ள நிர்வாகிகளான நீங்கள்தான் நமது கட்சியின் ஆணிவேர். நீங்கள் எல்லோரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சுந்தந்திரமாக செயல்பட விட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம். நீங்கள்தான் தேர்தலில் முன்கள வீரர்கள். இது வெறும் தேர்தல் அல்ல. இது ஜனநாயகப் போர். நீங்கள்தான் இதன் தளபதிகள்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாத காலம்தான் உள்ளது. உங்களது களப்பணியில் தான் நமது வெற்றி உள்ளது. உங்களுக்கு இந்த விஜய்யை பிடிக்கும் என்றால் உங்களது உழைப்பில் அதை வெளிக்காட்டுங்கள். நாம் அறிவிக்கின்ற வேட்பாளர்களுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

“சொந்த நாட்டை ஒரு கூட்டம் அபகரிக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் அந்த நாட்டை விட்டு வெளியேறி மறைந்து வாழ வேண்டி உள்ளது. அதன் பின்னர் தன்னுடைய நட்பு சக்திகளுடன் பேசி அந்த நாட்டை மீட்டெடுத்தவர் யார் தெரியுமா? நம் கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியார். அவர்களுக்கு அந்த நட்பு சக்தியாக இருந்து உழைத்தது சின்ன மருது, பெரிய மருது மற்றும் சையது ஆகிய மூன்று பேரும்தான். அன்று ஆங்கிலேயர் படை, ஆற்காட்டு படையை அடித்து துவம்சம் செய்து, நாட்டை மீட்டெடுத்தவர் வேலுநாச்சியார். அன்று இருந்த படைகள் போல் இன்று என்னென்ன படைகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி எத்தனை படைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் தலைமையும், சக்தியும் நம் உடன் இருக்கும் போது நம் நாட்டை நம்மால் மீட்டெடுக்க முடியாதா என்ன?

தவெகவின் இந்தப் படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாக நின்று வெல்லும் மிகப்பெரிய படை நம்முடன் உள்ளது. முக்கியமாக தீரம் மிக்க பெண்கள் படை நம்முடன் உள்ளது. அதை பார்த்துதான் அரசியல் அரங்கமே அதிர்ந்து போயுள்ளது.

நான் ஏற்கனவே சொன்னது போல எதிர்வரும் தேர்தல் வித்தியாசமான ஒன்று. நமது படை அதிசக்தி வாய்ந்த படை. இவ்வளவு நாளாக இதை நாம் மட்டும்தான் சொல்லி வந்தோம். இப்போது இந்த பேச்சு வெளியிலும் எழுந்துள்ளது. அதனால் நம்மோடு இருப்பவர்களை கணிக்க முடியவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மக்கள் ஏற்கெனவே கணித்து விட்டனர். அதை நாம் அறிவோம். தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த தீய சக்தி மற்றும் ஊழல்வாத சக்தி இடமிருந்து தமிழகத்தை மீட்டு விட்டோம் என உறுதியாக அறிவிப்போம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு மக்கள் இருக்கிறார்கள். உறுதியாக இருங்கள் வெற்றி நிச்சயம்” என பேசினார்.

தனது உரையின் போது, “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் எல்லோரும் உண்மையாக உழைப்போம், சத்தியமாக உழைப்போம், உறுதியாக உழைப்போம், ஒற்றுமையாக உழைப்போம்” என நிர்வாகிகளை விஜய் உறுதியேற்க செய்தார். உரையை முடித்த பிறகு தவெகவின் ‘விசில்’ சின்னத்தை அறிமுகம் செய்தார்.