ஓட்டு அரசியல்… திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமையை திமுக அரசு மறுக்கிறது – நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய எல்.முருகன்…!

Scroll Down To Discover
Spread the love

‘ஓட்டு அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்துள்ளது,’ என்று லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை லோக் சபாவில் திமுக எம்பிக்கள் எழுப்பினர். அப்போது, திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர்,’ என்று கூறி, நீதிபதி சுவாமிநாதன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறியதற்கு பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதித்துறையை அவர் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, டிஆர் பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன்பிறகு, திமுக எம்பிக்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்துள்ளதாக என்று குற்றம்சாட்டினார்.

அவர் பதிலளித்து பேசியதாவது :- மதுரை திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு, மக்களை வழிபடுவதை தடுத்து இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசும், போலீசாரும் அதனை மதிக்காமல், மக்களை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஎப் உதவியுடன் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அங்கு சென்றவர்களை போலீசார் கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது திமுக அரசு. மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு.

சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. போலீசார் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை விட்டு, வழிபாடு நடத்த செல்லும் மக்களின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். பாஜ தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? இரு நீதிபதிகள் சொன்ன பிறகும், மக்களை தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரமாக சென்று வழிபடும் உரிமை இருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை திமுக அரசு தடுக்கிறது. மாநில அளவில் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தை, பார்லிமென்டில் பேசி தொந்தரவு செய்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.