கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்புதான் என டெல்லியில் திமுக வழக்கறிஞர் வில்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை தொடரும். இன்று வரை நடத்திய விசாரணை விவரங்களை சிபிஐக்கு மாற்றும்படிதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று வரை எஸ்.ஐ.டி. நடத்திய விசாரணை சரியானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. மோசடியாக தீர்ப்பு பெற்றது உறுதியானால் அது செல்லாததாகிவிடும்.
வழக்கு தாக்கல் செய்தது மோசடி என தெரியப்பட்டால் உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பையே திரும்பப் பெறக் கூடும். இடைக்கால உத்தரவு பிறப்பித்த பின்புதான் பாதிக்கப்பட்ட இருவரும் காணொலி மூலம் ஆஜராகினர். உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள ஆணை இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதுதான்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது. சிபிஐ விசாரணை கேட்காத தவெக, எதற்காக இந்த தீர்ப்பை கொண்டாடுகின்றனர். தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எஸ்ஐடி வேண்டுமென்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் கேட்கவில்லை.எஸ்ஐடி அமைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தமிழ்நாடு அரசின் தலையீடு இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவில் தமிழ்நாடு அரசின் தலையீடு இருப்பதாக ஆதவ் அர்ஜுன் கூறியிருந்தால் நீதிமன்ற அவமதிப்பாகும் என தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா தங்களுக்கு சி.பி. விசாரணை ஒதுக்கியதை வெற்றி என்று கூறியுள்ளார். மேலும் தேவை இல்லாமல் மற்றவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Leave your comments here...