வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற ஜோ பைடன் – ஜில் பைடனுக்கு வைரக்கல்லை பரிசளித்த பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வெள்ளை மாளிகை சென்றார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இரு தலைவர்களும் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அதன்பின் இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.


பிரதமர் மோடி சந்தன கட்டையால் செய்யப்பட்ட கலைவண்ணம் மிக்க பெட்டியை ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரின் கைவினைப்பொருளால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியாகும். மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தனமரத்தால் உருவாக்கப்பட்ட அந்த பெட்டியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வடிவங்கள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

அந்த பெட்டியில் வெள்ளியினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் எண்ணெய் விளக்கு போன்றவை இடம் பிடித்திருந்தன. கொல்கத்தாவில் உள்ள ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் தூய்மையான வெள்ளி நாணயமும் இடம் பெற்றிருந்தது. ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் க்ரீன் டைமண்ட்-ஐ பரிசாக வழங்கினார். அதேபோல் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழமையான கேமரா ஒன்றை பரிசளித்தார். அதோடு வனவிலங்கு புகைப்பட புத்தகம், கைகளால் உருவாக்கப்பட்ட பழங்காலத்து அமெரிக்க புத்தக பெட்டியையும் வழங்கினார்.