மதுரையை சேர்ந்த பாரத மக்கள் கட்சி என்ற கட்சி திமுகவிற்கு போட்டியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டதுடன், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது மதுரை அரசியல் வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்தில், ஊடகத்தினரை அழைத்து பாரத மக்கள் கட்சி நிர்வாகிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அவர்களுக்கு ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறி அதையும் மேசை மேல் எடுத்து வைத்துக் கொண்டு பேட்டி அளித்தனர். “2 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி துவங்கினோம். தற்போது சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் துணையுடன் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்” என்றவர்கள்

“அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். மக்கள் மனசாட்சி கட்சி, இந்து ஜனநாயக பேரவை, விவசாய மக்கள் கட்சி, தேசிய முஸ்லீம் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.” என்றனர்.

அவர்களுடைய தேர்தல் அறிக்கை குறித்து பேசுகையில், “பரம்பரை சித்த வைத்தியர் களுக்கு நலவாரியம், திருநங்கைகளுக்கு நல வாரியம், மகளிர் மேம்பாட்டுக்கு திட்டம், கல்லூரி மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும் வேலைவாய்ப்பு திட்டம், நோயற்ற தமிழ் நாட்டை உருவாக்கும் செயல்பாடுகள், ஆதிதிராவிடர், இருளர், மலைவாழ் மக்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைத்தல், அனைத்து வகை கோவில் பூசாரிகளுக்கு தனி நல வாரியம் அமைத்தல், பள்ளி, கல்லூரிகளில் ஜாதி, மத அடையாளங்களை தவிர்த்தல் ஆகியவையே எங்களுடைய தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்” என தெரிவித்தனர்.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் நிலையில் உங்களுடைய கட்சி எப்படி வெற்றி பெரும் என கேட்டதற்கு, “வெற்றியும் தோல்வியும் இறைவன் கொடுத்த வரம்” என பதிலளித்தனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...