இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை.!காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடந்தது. இரு தரப்பு உறவுகள், கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கு தூணாக வங்கதேசம் விளங்குகிறது. அந்நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆரம்பம் முதல் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில், கொரோனா தடுப்பூசி, சுகாதாரத்துறையில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றின. மஹாத்மா காந்தி மற்றும் முஜிபுர் ரஹ்மான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை துவங்கி வைத்தது பெருமை அளிக்கிறது. இரு தலைவர்களும், இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர் என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசியதாவது: பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதற்காக உயர் நீத்த 3 லட்சம் தியாகிகளுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 1971-ம் ஆண்டு நடந்த போரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து வங்காளதேசத்தின் விடுதலைக்கு துணை நின்ற இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நாங்கள் எந்நாளும் கடமைபட்டுள்ளோம். எனக் கூறினார்.


தொடர்ந்து இரு தலைவர்களும் சிலஹதி – ஹல்திபாரி இடையிலான ரயில்சேவையை துவக்கி வைத்தனர்.ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும். தொடர்ந்து மஹாத்மா காந்தி, முஜிபுர் ரஹ்மான் தொடர்பான இணையவழி கண்காட்சியை துவக்கி வைத்ததுடன், முஜிபுர் ரஹ்மான் குறித்த சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டனர்.