தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 29-ந் தேதியன்று நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் முன்பு உள்ள ராஜகோபுரத்தின் அருகே சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி வட்டாட்சியர் அமுல் மற்றும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த பந்தகால் முகூர்த்த விழாவில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

மேலும் தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதியன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா உள்ளிட்ட இதர விழாக்கள் நடைபெற்று, நவம்பர் 29-ந் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா, அதன் பின்னர் நடைபெறும் தெப்பல் உற்சவம் மற்றும் இறுதி விழாவான சண்டிகேஸ்வரர் விடையாற்றி திருவிழா வரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விதிக்கும் நிபந்தனைகளின் படியே நடைபெறும் என கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.