இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை-ரயில் சுரங்கப்பாதை.. அசாமில் ரூ.18,662 கோடி செலவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Scroll Down To Discover
Spread the love

அசாமில் ரூ.18,662 கோடி செலவில் நீருக்கடியில் நாட்டின் முதல் சாலை-ரயில் போக்குவரத்துக்கான இரட்டை குழாய் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை டெல்லியில் நேற்று கூடியது. இதில், ஸ்டார்ட் அப் இந்தியா 2.0 திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க கடந்த 2016ல் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 500 ஆக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. திட்டத்தின் முதல் தவணை தொகை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் இந்தியாவின் முதல் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகர் இடையே ரூ.18,662 கோடியில் 34 கிமீ தூரத்திற்கு நீருக்கடியில் இரட்டைக் குழாய் மூலம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றின் கீழ் நாட்டின் முதல் நீருக்கடியிலான சுரங்கப்பாதை கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தில், கடலுக்கு அடியில் முதல் சுரங்கப்பாதைக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, அசாமில் நாட்டின் முதல் நீருக்கடியில் இரட்டை சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இது உலகின் 2வது நீருக்கடியில் அமையும் சாலை-ரயில் போக்குவரத்து சுரங்கப்பாதையாக இருக்கும்.