பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 74, சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.25 ) காலமானார். கொரோனா தாக்கத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பி.,க்கு, செப்., 4ம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதை, மருத்துவமனை நிர்வாகம், தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிபி வீட்டில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்குவைக்கப்பட்டது. பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று இரவு அவரது உடல் செங்குன்றம் அருகேயுள்ள தாமரைபாக்கத்தில் பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை இயக்குநர் பாரதிராஜா, பின்னணி பாடகர் மனோ, நடிகர் விஜய் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் ஏராளமான பொது மக்களும் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதனிடையே நடிகர் விஜய் அங்கு வந்து எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பாடகரான எஸ்.பி.பி. 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் பிரியமானவளே படத்தில் அவரது தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, அதிகாரிகள், ஆந்திர மாநில அமைச்சர் அனில்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, குண்டுகள் சப்தம் முழங்க மரியாதை செலுத்தினர். மதியம் 12;35 மணியளவில் எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்பட்டது