நாளை முதல் புட்டபர்த்தி சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு செல்ல அனுமதி.!

Scroll Down To Discover
Spread the love

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தியில், சத்திய சாயி பாபாவின் ஆஸ்ரமமான பிரசாந்தி நிலையம் உள்ளது. ஊரடங்கால், ஆஸ்ரமத்துக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், நாளை முதல், பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, பிரசாந்தி நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சாய் குல்வந்த் அரங்கில், காலை ஆரத்திக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பிரசாந்தி நிலைய ஆஸ்ரமத்தின் கணேஷ் நுழைவு வாயில் மற்றும் கோபுரம் நுழைவு வாயில் வழியாக வரலாம். தினமும், காலை, 9:30 மணி முதல், 10:30 மணி வரையிலும்; மாலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.நுழைவு வாயில்களிலேயே, பக்தர்களின் உடல் வெப்ப நிலை மற்றும் கொரோனா தொடர்பாக பரிசோதனைகள் செய்யப்படும். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும்.

பக்தர்கள், சொந்தமாக கிருமி நாசினி மருந்து கொண்டு வரலாம். சமூக விலகல் போன்ற கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.ஆஸ்ரமத்தின் உள்ளே கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. லக்கேஜ், மொபைல் போன்கள் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆஸ்ரம வளாகத்துக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தங்குமிடம், உணவகம், பேக்கரி, ஷாப்பிங் சென்டர், மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.சாய் குல்வந்த் அரங்கிற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மற்ற பகுதிகளுக்கு செல்ல கூடாது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.