நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்? என தவெக தலைவர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் விஜய் பேசியதாவது:
“நமது அரசியல் பயணத்தில் இது மிக மிக முக்கியமான காலகட்டமாகும். நான் ஏன் இதை அழுத்தமாக சொல்கிறேன் என்றால் அழுத்தத்துக்கு அடங்கி போகும் ஆட்கள் நாம் இல்லை. இது நம்மிடம் நடக்கவே நடக்காது. ‘அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டீர்கள்?’ என்றால், ‘அழுத்தம் இருக்கிறது’. ஆனால் அது நமக்கு இல்லை மக்களுக்குதான்.
தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பாஜகவுக்கு அடிமையாகதான் இருந்தனர். அவர்களை நம்பி நமக்கு எந்தப் பயனும் இல்லை. இப்போது ஆட்சியில் உள்ள திமுக அரசை நம்பியும் நமக்கு பயன் இல்லை. ஏனெனில் இவர்கள் மறைமுகமாக சரண்டர் ஆகியுள்ளனர். அவர்கள் வேஷம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக ‘கலர் கலரா’, கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.
‘இவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே. நமக்காக உண்மையாக உழைப்பதற்கு யாராவது வந்து விட மாட்டார்களா’ என்று வெளியில் சொல்ல முடியாத அழுத்தத்தில் மக்கள் உள்ளனர். இதனால் மக்கள் இப்போது தவெகவை நம்புகிறார்கள். அதனால்தான் இது நமக்கு மிக முக்கிய காலக்கட்டம் என்று சொன்னேன்.
தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு யூகங்கள் நடந்து வருகிறது. விஜய் உடன் யார் வருவார்கள்? என்று நம்மை குறைத்து மதிப்பிட்டு பேசி வருகின்றனர். இது நமக்கு புதிது அல்ல. முப்பது ஆண்டுகளாக இதை நாம் எதிர்கொண்டு வருகிறோம். மக்கள் நமக்கென ஒரு இடத்தை கொடுத்துள்ளனர். எனது கேரியரின் உச்சத்தை மக்கள் கொடுத்துள்ளனர். நம்மை நம்பும் மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இப்போது அது எனது குணாதிசியமாக மாறிவிட்டது.
இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வந்த பிறகும் சரி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி, ஆளும் கட்சி, ஆண்ட கட்சி போல ஊழல் என்பதை செய்ய மாட்டோம். ஊழல் கரை இல்லாத ஆட்சி நடைபெறும். இது சினிமா கதை அல்ல. ஒரே நாளில் மாற்றம் நடைபெறாது. ஆனால், எதற்கும் ஆசைப்படாத ஒருவன் அரசியலுக்கு வரும் போது ஊழல் இருக்காது.
அதனால் தீய சக்தி மற்றும் ஊழல் சக்தி என இரண்டு பேரும் தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடாது. இந்த கட்சிகளை எதிர்க்கும் பலம் நம்மிடம்தான் உள்ளது. நீங்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும், என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போகவும், அடிமையாக இருக்கவும் நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம்.
மக்களுக்கு என் மீது மட்டும் நம்பிக்கை இருந்தால் போதாது. நம் உடன் பயணிக்கும் எல்லோர் மீதும் அந்த நம்பிக்கை வேண்டும். அது தொடர வேண்டும். எல்லோரும் உண்மையாக உழைக்க வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் நமது அரசியலில் சமரசம் செய்யக் கூடாது. நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, உழைக்க வேண்டும்.

Leave your comments here...