துப்பாக்கி சூடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டில் மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இமயம்குமார், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினர் இடையே நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 13 பேரும், இமயம்குமார் தரப்பை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இமயம் குமார் தரப்பை சேர்ந்த சிவகுமார் (வயது 39), ஆறுமுகம் (42), தேவராஜ் (24), மோகன் (24), பிரேம்குமார் (31) ஆகிய மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த சீனிவாசனுக்கு ஆதரவாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனை கண்டித்தும் திருப்போரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அவரது வீட்டில் மேலும் ஒரு துப்பாக்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று விடிய விடிய போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். ஒரு ஏர்கன் மற்றும் குண்டு தயாரிக்கும் இயந்திரம், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.