தேனாம்பேட்டை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்- 4 பேர் சரண் மதுரை நீதிமன்றத்தில் சரன்..!!

Scroll Down To Discover
Spread the love

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தேனாம்பேட்டை பகுதியில் செவ்வாய் மதியம் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரியவந்தது. பின்னர் பெருநகர காவல் ஆணையர் அந்த பகுதியை ஆய்வு செய்தார்.

அவர்களில் ஒருவரது வாகனப் பதிவு எண் போலி என்று கண்டறியப்பட்டது.அத்துடன் மற்றொருவர் கல்லூரி மாணவர் என்றும் சந்தேகிக்கப்பட்டது. எனவே சந்தேகத்திற்குரிய இருவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சம்பவ இடத்திற்கு அருகில்தான் தேனாப்பேட்டை காவல்நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மேயர் சுந்தரராவ் சாலைக்கு செல்ல, போக்குவரத்தின் எதிர்திசையில் கருப்பு நிற கார் ஒன்று சென்றது. அந்த காரை குறிவைத்து வெடிகுண்டு வீசப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர். இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பிரசாந்த், கம்ருதீன், ராஜசேகர், ஜான்சன் ஆகிய 4 பேர் சரணடைந்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.