தமிழகத்தில் கொள்ளையடித்தது போதாது என்று, புதுச்சேரியிலும் கொள்ளையடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் டாஸ்மாக்கில் மட்டும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். இங்கேயும் மதுவிற்பனை அதிகமாக இருப்பது ஸ்டாலினின் கண்ணை உறுத்திக் கொண்டுள்ளது. ஏன் தமிழகத்தில் அடிப்பதை இங்கே அடிக்க கூடாது என்ற திட்டத்தோடு இங்கே வருகிறார் ஸ்டாலின்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரான அவர், கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்துள்ளார். மாநிலத்தில் ஒரு கட்சியும், மத்தியில் ஒரு கட்சியும் ஆட்சி செய்தால், மாநிலத்துக்கு தேவையான திட்டங்களும் கிடைக்காது. நிதியும் கிடைக்காது. ஆகவே, ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் இருப்பதுபோல் இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். அந்த அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பாஜக சார்பில் நிறைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பகுதியில் மீன்பிடி தொழில், விவசாயம், தொழிற்சாலை அதிகமாக இருக்கிறது. நல்ல கல்வி கூடங்கள் இருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான நன்மைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் எப்படி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதி உயர்த்தி கொடுத்துள்ளார்களோ, அதேபோல் புதுச்சேரி மீனவ மக்களுக்கும் மீன்பிடி தடைகால நிதி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல், மீனவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். தமிழக மீனவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வசதி வாய்ப்புகள் புதுச்சேரி மீனவர்களுக்கும் கிடைக்க எங்களது எம்எல்ஏக்கள் பாடுபடுவார்கள்.
புதுச்சேரி என்றால் சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற நகரம். இங்கு பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருகிறார்கள். இது பெருமைக்குரியது. இதன் மூலம் அரசுக்கு அதிக வருமனம் கிடைக்கிறது. புதுச்சேரி சுற்றுலா மேம்பட மத்திய அரசிடமிருந்து எங்களது எம்பிக்கள் நிதி பெற்று தருவார்கள். சுற்றுலா எந்த அளவுக்கு மேம்படுகிறதோ, அந்த அளவுக்கு இந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் பெருகும். இதற்காக எங்களது எம்எல்ஏக்களும், எம்பிக்களும் உங்களுக்கு குரல் கொடுப்பார்கள். புதுச்சேரி யூனியன் பிரசேதத்துக்கு தனி மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு அதிமுக கடுமையான முயற்சி எடுக்கும்.
மத்திய அரசோடு தொடர்பு கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அதிமுக பாடுபடும். கரோனா காலத்தில் மக்களை துன்பத்தில் இருந்து முதல்வர் ரங்கசாமி மீட்டு எடுத்தார். அதேபோல், பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு கரேனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான மருந்து கண்டுபிடித்து விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் காப்பாற்றினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார். அங்கு கொள்ளையடித்தது பத்தாது என்று இங்கும் கொள்ளையடிக்க பார்க்கிறார். தமிழகத்தில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். டாஸ்மார்க்கில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் புரிந்திருக்கின்றனர். இங்கு மதுபான விற்பனை அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருக்கிறது. ஏன்? அங்கு அடிப்பதை புதுச்சேரி வந்து அடிக்கக்கூடாது என்று திட்டமிட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு வருவார். உங்களுக்கு நன்மை செய்ய வரமாட்டார். உங்களிடம் இருக்கின்ற நிதியை சுரண்டுவதற்கு வருவார்.

Leave your comments here...