சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஊர்வலம்

Scroll Down To Discover
Spread the love

அய்யா வைகுண்டரின் அவதார தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டர் அவதார தின விழா மாசி மாதம் 20-ந் தேதி அய்யாவழி பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தின விழா நேற்று நடந்தது.


இதை முன்னிட்டு, குமரி மாவட்டம், சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டா் தலைமைப் பதிக்கு அய்யாவழி பக்தா்கள் பங்கேற்ற ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக, அய்யா வைகுண்டா் விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்து பக்தா்கள் வாகனங்களில் ஊா்வலமாகப் புறப்பட்டு நாகா்கோவில் வந்தனா். இதேபோல மற்றொரு குழுவினா் வைகுண்டா் சிறைவைக்கப்பட்டிருந்த திருவனந்தபுரத்தில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு வந்தனா். இவா்கள் நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலை வந்தடைந்ததும் அங்குள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை இரவு அய்யாவழி பக்தா்களின் சமய மாநாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நாகராஜா கோயில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்துக்கு பாலஜனாதிபதி தலைமை வகித்தாா். மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் செல்ல, அதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அணிவகுத்துச் சென்றனா்.

வைகுண்டர் விழாவில் இந்து கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்


அவதார தின விழாவையொட்டி தலைமை பதி வளாகம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. அதைத் தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. மேலும் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதியின் தெற்கு பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல அன்புவனம், தெற்கு ரத வீதி உட்பட பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவில் கலையரங்கில் அய்யா வழி மாநாடு நடைபெற்றது.