பிரதமர், அமைச்சர்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் இனி லோக்பால் அமைப்பில் கூறலாம் – புகார் கொடுப்பதற்கான நடைமுறையை அறிவித்தது மத்திய அரசு

Scroll Down To Discover
Spread the love

தேசிய அளவில் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோ‌‌ஷ் கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 4 முன்னாள் நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என 8 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ஒருவரான நீதிபதி திலீப் போஸ்லே சமீபத்தில் பதவி விலகினார்.

இந்த லோக்பால் அமைப்பில் பிரதமர், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது ஊழல் புகார் கூறலாம்.இதுவரை லோக்பாலில் எவ்வாறு புகார் செய்வது என்பதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இந்த நடைமுறைகளை நேற்று அறிவித்தது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இதில் மின்னணு முறையில் புகார் செய்வது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அந்த புகாரின் நகலை 15 நாட்களுக்குள் லோக்பால் அமைப்புக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ வழங்க வேண்டும்.அதுதவிர இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட அரசியல்சாசனத்தின் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 இந்திய மொழிகளிலும் புகார் செய்யலாம். பிரதமர் உள்பட மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றம் தொடர்பான விவரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும்.

இந்த புகாரை முறையாக கையெழுத்திட்ட வாக்குமூலமாக முத்திரைத்தாளில் தெரிவிக்க வேண்டும். புகார்தாரரின் அடையாள அட்டை நகல், புகார்தாரர் சார்பாக தாக்கல் செய்யும் அமைப்பு, சங்கம், நிறுவனம், சமுதாய சங்கம் ஆகியவற்றின் பதிவு சான்றிதழ், அங்கீகார சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.பொய்யான, அற்பத்தனமான, வீணான, எரிச்சலூட்டும் அல்லது தொந்தரவு கொடுக்க வேண்டுமென்ற புகார்கள் ஏதாவது கொடுக்கப்பட்டால் புகார்தாரருக்கு ஒரு ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது