பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி என முதலமைச்சர் எடியூரப்பா குற்றச்சாட்டு

Scroll Down To Discover
Spread the love

பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன்தினம் மாலையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா ஏற்பாடு செய்திருந்தார். போராட்டத்திற்கு ஓவைசி எம்.பி. தலைமை தாங்கி இருந்தார். இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த கல்லூரி மாணவியான அமுல்யா லியோனா (வயது 19) என்பவர் மேடையில் ஏறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார். இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதையடுத்து, உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அமுல்யாவை தேசத் துரோக வழக்கில் கைது செய்தனர். அவர் மீது சட்டப்பிரிவு 124(ஏ), 153(ஏ), 153(பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில்:- அமுல்யா லியோனா என்ற மாணவி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியுள்ளார். அவரை போன்றவர்களின் பின்னணியில் செயல்படும் அமைப்புகளை கண்டறிவது முக்கியம். அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இதுபோன்ற செயல்களால் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி நடந்து கொண்டிருக்கிறது என்பது மேல் நோட்டமாக தெரிகிறது.


பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண், கடந்த காலங்களில் நக்சலைட்டுகளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு பின்னால் இருக்கும் அமைப்புகள் எது என்பது குறித்து விசாரணை நடைபெற்றால் அனைத்து உண்மையும் வெளியே வரும். அந்த பெண் சட்டப்படி தண்டிக்கப்படுவார். அவருக்கு பின்னால் இருந்து செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பெண்ணின் தந்தை, தனது மகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவரை ஜாமீனில் வெளியே எடுக்க மாட்டேன் என்றும், அவருக்கு பாதுகாப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளதாக கூறினார்.