உத்தரபிரதேசத்தின் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலில் உள்ள 15 துணை கோயில்களுக்கான பொதுமக்கள் தரிசனம் பிப்ரவரியில் தொடங்க உள்ளது என ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது
உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்களுக்கான பொதுமக்கள் தரிசனம் பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்கான முடிவு ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மேலும் கூறியதாவது: ராமர் கோயில் வளாகத்துக்குள் அனுமதிச் சீட்டுடன் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். இதற்காக ஒரு செயலி உருவாக்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அது தயாராகிவிடும். பிறகு பிப்ரவரி முதல் வாரத்தில் துணை கோயில்களில் தரிசன வசதி தொடங்கப்பட வாய்ப்புள்ளது.
ராமர் கோயிலுக்கு அன்றாடம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதை மனதில் கொண்டு, அயோத்தியில் உள்ள ராம் மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்கி 2 ஆண்டுகளில் முடிவடையும். இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் சர்வதேச ராம் கதா அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறக்கப்படும். இதில் ஏற்கெனவே நான்கு டிஜிட்டல் கேலரிகள் கட்டப்பட்டுள்ளன. ஐந்தாவது கேலரியின் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த டிஜிட்டல் கேலரி மற்றும் உயர் தொழில்நுட்ப அனுமன் கேலரியை அமைக்கும் பணி சென்னை ஐஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலின் 2-வது மாடியில் உள்ள அருங்காட்சியகத்துக்காக பல்வேறு மொழிகளில் உள்ள ராமர் கதைகளின் அசல் பிரதிகளைச் சேகரிக்க முயன்று வருகிறோம். இவற்றில் சில பிரதிகள் கிடைத்துள்ளன. இந்த அரிய பிரதிகளைப் பெறுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அறக்கட்டளை கடிதம் அனுப்பியுள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலால் அயோத்தி ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...