10வது முறை முதல்வரான ஒரே நபர் – உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் நிதிஷ்குமார்..!

Scroll Down To Discover
Spread the love

பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூ.ட்டணி அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் அரசியலில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ்குமார் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த விவரத்தை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; 10வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் உண்மையிலேயே அரிய சாதனை.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றும் பீஹார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; இது பீஹாருக்கு ஒரு வரலாற்று தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது. பீஹாருக்கு ஒரு பெருமையான தருணம். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் நிலையான அர்ப்பணிப்புள்ள தலைவரை போற்றுவோம்.

இவ்வாறு சஞ்சய் குமார் ஜா கூறி உள்ளார்.அதிக நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் எட்டாவது இடத்தில் இருக்கிறார். அவர், அவர் 19 ஆண்டுகளை கடந்து முதல்வராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.