அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி நிறைவு – கோபுர உச்சியில் காவிக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி நிறைவடைந்ததையடுத்து, 161 அடி உயர கோபுர உச்சியில் பிரதமர் மோடி நேற்று காவிக் கொடி ஏற்றினார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி 2020 ஆகஸ்டில் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இதையடுத்து பொதுமக்களின் வழிபாட்டுக்கு கோயில் திறக்கப்பட்டது. எனினும், கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், முழு கட்டுமானப் பணியும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, பிரதான கோயில் கோபுர உச்சியில் கொடியேற்றும் விழா நேற்று நடை பெற்றது.

இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அயோத்திக்கு வந்தார். கோயில் வளாகத்தில் லட்சுமணருக்காக கட்டப்பட்டுள்ள சேஷாவதார் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து, குழந்தை ராமரை வழிபட்டார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து பிரதான கோயிலின் கோபுர உச்சியில் காவிக் கொடியை ஏற்றினர்.

161 அடி உயரம் கொண்ட கோபுரத்தில் ஏற்றப்பட்டுள்ள அந்தக் கொடி 10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது. அந்தக் கொடியில், ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்​கும் வகை​யில் சூரிய சின்​னம், மையத்​தில் ஓம் மற்​றும் மந்​தாரை மரம் ஆகியவை பொறிக்​கப்​பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அயோத்தி நகரம் தனது வரலாற்றில் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் கண்டு வருகிறது. ராமர் கோயிலில் கொடியேற்றி இருப்பதன் மூலம் பல ஆண்டு கனவு நனவாகி உள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் தலைவணங்குகிறேன்.

அயோத்தி மீண்டும் உலகத்துக்கு உதாரணமாக விளங்கும் நகரமாக இப்போது உருவெடுத்து வருகிறது. த்ரேதா யுகத்தின் அயோத்தி மனிதகுலத்துக்கு தர்மத்தின் பரிசை வழங்கியது. 21-ம் நூற்றாண்டில் அயோத்தி மனிதகுலத்துக்கு புதிய வளர்ச்சி மாதிரியை வழங்குகிறது. அப்போது, அயோத்தி நற்பண்பின் மையமாக இருந்தது. இப்போது, அயோத்தி ஒரு வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பாக உருவெடுத்து வருகிறது.

இன்று, முழு இந்தியாவும் உலகமும் ராமர் மயமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக நீடித்த வேதனை இன்று ஓய்வு பெறுகிறது. நூற்றாண்டு கால தீர்மானம் இன்று நிறைவேறுகிறது. 500 ஆண்டுகளாக நீண்ட அந்த புனித யக்ஞத்தின் தீபம் இன்று நிறைவுபெறுகிறது.

வருங்கால அயோத்தி புராணமும் புதுமையும் சங்கமிக்கும் இடமாக இருக்கும். சரயு நதியின் அமுததோட்டமும், வளர்ச்சி என்ற தூய நீரோடையும் ஒன்றாக சேரும் நகரமாக அது மாறும்.

இந்த காவிக் கொடி சாதாரணமானது அல்ல. போராட்டம், பக்தி, இந்திய நாகரிக மறுமலர்ச்சியின் சின்னமாக விளங்குகிறது. இதன் காவி நிறம், அதில் பொறிக்கப்பட்டுள்ள சூரிய (ரகு) வம்சத்தின் பெருமை, வரையப்பட்ட ஓம் என்ற எழுத்து, பொறிக்கப்பட்டுள்ள மந்தாரை (கோவிதாரா) மரத்தின் சின்னம் இவையெல்லாம் ராம ராஜ்யத்தின் மகிமையை குறிக்கும்.

முனிவர்களின் பக்தியின் புனிதப் பலன் மற்றும் சமுதாயத்தின் கூட்டு பங்களிப்பை இந்தக் கொடி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது வருங்கால தலைமுறையினருக்கும் ராமரின் உயரிய கொள்கைகளை பறைசாற்றும். அயோத்தி ஸ்ரீ ராமர் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய இடம். பாகுபாடு, வேதனை, கஷ்டம் இல்லாத சமூகத்தை நோக்கமாகக் கொண்டது இந்தக் கொடி. சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதே இதன் இலக்கு ஆகும். ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. வரும் 2047-ல் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோகன் பாகவத்… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஏராளமானோர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக பலர் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். அவர்களுடைய ஆன்மா இன்று சாந்தி அடையும். அசோக் சிங்கால் இன்று இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். மஹந்த் ராம் சந்திர தாஸ், விஷ்ணு ஹரி டால் மியா உள்ளிட்ட எண்ணற்ற துறவிகள், பொது மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். ஒரு காலத்தில் அயோத்தியில் உயர்ந்து பறந்து உலகுக்கு அமைதி, செழிப்பை பரப்பிய ராமராஜ்யத்தின் கொடி இன்று மீண்டும் அதன் சிகரத்தில் ஏறி உள்ளது’’ என்றார்.