பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார்.
மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றார். ஆட்சிக்குப் பிந்தைய அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அப்பயணம் சர்வதேச கவனம் பெற்றது. அங்கே பிரதமருக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டில் விருதினை புதின் வழங்கினார். மோடி – புதினின் சந்திப்பு விமர்சனங்களை ஈர்த்தது.
குறிப்பாக பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். 13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயமடைந்தனர். உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றனர். ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் அடியுமாகும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் நேரடியாக ரஷ்யாவை வலியுறுத்தியபோதிலும் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்தே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

														
														
														
Leave your comments here...