இந்திய அளவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் உள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நம்பியோ என்ற தனியார் நிறுவனம், பிபிசி, தி டெலிக்ராப், தி ஏஜ், சைனா டெய்லி, தி வாஷிங்டன் போஸ்ட், USA டுடே உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உலகின் முக்கிய நகரங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை 127வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மற்ற இந்திய நகரங்களான மும்பை 161வது இடத்திலும் கொல்கத்தா 174வது இடத்திலும் டெல்லி 263வது இடத்திலும் உள்ளன.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அவ்தார்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று சென்னை அறிவிக்கப்பட்டிருந்தது