ஆசிய விளையாட்டு போட்டி – 100 பதக்கங்கள் குவித்து வரலாற்று சாதனை இந்தியா..!

Scroll Down To Discover
Spread the love

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-யை தொட்டது.

2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. கடந்த 4-ம் தேதி இதை முந்தி இந்தியா சாதனை படைத்து இருந்தது. தற்போது 100 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.பெண்கள் கபடியில் இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இறுதிப் போட்டியில் சீன தைபேயை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் இந்தியா 26-25 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை பெற்றது. முதல் பாதியில் இந்தியா 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சீன தைபே சவால் கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆண்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொள்கிறது.

முன்னதாக, வில்வித்தையில் 2 தங்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தது.பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியா வீராங்கனை சேவோனை வீழ்த்தினார்.

இதே இந்தியாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் 146-140 என்ற கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த ரைத் ஜில்காட்டியை தோற்கடித்தார்.ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒஜாஸ் பிரவின்-அபிஷேக் வர்மா மோதினார்கள்.

இதில் ஒஜாஸ் 149-147 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி கிடைத்தது.வில்வித்தை போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது.பெண்கள் கபடி பிரிவில் பெற்ற தங்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது. பிற்பகலில் மேலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும்.நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் கராத்தே போட்டிகள் மட்டும் நடைபெறுகிறது.