இஸ்ரோவின் ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்மதி காலமானார்..!

Scroll Down To Discover
Spread the love

இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10, 9 என்ற கவுன்ட்டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது என்பது வரை அறிவித்த ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ ஆன விஞ்ஞானி வளர்மதி காலமானார்.

அவருக்கு வயது 50. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வளர்மதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாரடைப்பால் நேற்று அவர் உயிர் பிரிந்தது. வளர்மதியின் மறைவிற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் அரியலூரில் பிறந்த வளர்மதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை அறிவிக்கும் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக பணியாற்றி வந்தார் . கம்பீரமான குரல், தொழில்நுட்ப வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் என பல திறமைகளை கொண்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டுகளை பெற்றவர்.

சந்திரயான் 3 உட்பட கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுகளின் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார். சந்திரயான் 3, கடந்த ஜூலை 30-ல் சிங்கப்பூர் செயற்கைகோள்களை ஏந்தி சென்ற பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் நிகழ்வை கடைசியாக வர்ணனை செய்தார் வளர்மதி.

அரியலூரில் பிறந்து தமிழ்வழியில் பள்ளிப் படிப்பைப் பயின்ற வளர்மதி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்து, 1984ல் இஸ்ரோ பணியில் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் ‘ஜிசாட்’ 12 பணியின் திட்ட இயக்குநர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2015ல் அப்துல் கலாம் நினைவாகத் தமிழக அரசு வழங்கத் தொடங்கிய விருதைப் பெற்றார்.