விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் – 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Scroll Down To Discover
Spread the love

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக முதலில் சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின்னர், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் இன்று அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல் என ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.