மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவு ரயில்களில் சலுகை – ரயில்வே நிர்வாகம்..!

Scroll Down To Discover
Spread the love

விரைவு ரயில்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, ‘லோயர் மற்றும் மிடில் பெர்த்’ வசதி ஒதுக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் தனியாக அல்லது குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் மற்றும் முதியோருக்கு லோயர் மற்றும் மிடில் பெர்த் ஒதுக்கி தரும் சலுகை ஏற்கனவே உள்ளது. இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த சலுகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துஉள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மண்டலங்களுக்கும் மார்ச், 31ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- விரைவு ரயில்களில் ‘ஸ்லீப்பர்’ வகுப்பில் மாற்றுத்திறனாளிக்கும் அவருடன் பயணிக்கும் உதவியாளருக்கும் கீழ் மற்றும் நடுவரிசையில் தலா இரண்டு பெர்த்களும், மூன்றாம் ‘ஏசி’ வகுப்பில் இரண்டு பெர்த்களும் ஒதுக்க வேண்டும். மேலும், ‘கரீப் ரத்’ ரயில்களில், நான்கு பெர்த்கள் ஒதுக்க வேண்டும்.

இதேபோல் மாற்றுத்திறனாளிகளில் கை, கால்கள் இழந்தவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாத மன வளர்ச்சி குன்றியவர்கள், பார்வை மற்றும் செவித்திறன் முழுமையாக இழந்தோருக்கும் அவர்களுடன் ரயிலில் பயணிப்பவருக்கும் கட்டண சலுகைகளும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.