ஆஸ்கர் விருது : பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்…!

Scroll Down To Discover
Spread the love

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பிரதமர் நரேந்திர மோடி வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார்.

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை வந்தார். பபந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தில் இருந்து சாலை மார்கமாக காரில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வந்தடைந்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.


முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமுக்கு காலை 11.15 மணிக்கு வந்தார். முதுமலை வந்த பிரதமரை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், ஐஜி சுதாகர் எஸ்பி கி.பிரபாகர் ஆகியோர் வரவேற்றனர்.


பின்னர், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், டி 23 புலியை உயிருடன் பிடித்த வேட்டை தடுப்பு காவலர் பன்டனை பாராட்டினார். பின்னர் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார் பிரதமர். மேலும், புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். சுமார் 25 நிமிடங்கள் நிகழ்ச்சியை முடித்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார்.

அங்கு அவரை காண பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்ததை கண்ட பிரதமர் மோடி வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களுக்கு கை அசைத்து வணங்கி காரில் புறப்பட்டு ஹெலிபேடுக்குச் சென்றார். காலை 11.15 மணிக்கு தெப்பக்காடு வந்த பிரதமர் நிகழ்ச்சிகளை முடித்து 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார்.