குரூப் 2 தேர்வில் ‘மைனஸ்’ மதிப்பெண் உண்டு – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

அரசு துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் 5,529 இடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வரும் 21ந்தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை ‘ஷேடிங்’ செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தாலும் 5 மதிப்பெண் கழிக்கப்படும்.ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.