ஹெலிகாப்டர் விபத்து – மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை: ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை..!

Scroll Down To Discover
Spread the love

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விமான பெட்ரோல் என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிகிறது. தீப்பிடித்து எரிவதால் ஹெலிகாப்டர் அருகே சென்று மீட்பு பணி மேற்கொள்ள முடியவில்லை.

கோவையில் இருந்து 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூருக்கு விரைகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு விரைந்துள்ளது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நிபுணர்கள், குழுவில் இடம்பெற்றுள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் , அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். இதனிடையே விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.