இது மக்கள் வாழ்விடமா? அல்லது மழைக்கால ஏரியா? – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

Scroll Down To Discover
Spread the love

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடம்பாக்கம், கொளத்தூர், தியாகராயநகர், வேளச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 7ம் தேதி வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ததோடு பொதுமக்களுக்கு வழங்கும் இலவச உணவை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து வழங்கி வருகிறார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள புளியந்தோப்பு, கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் அங்கிருந்த படகு ஒன்றில் ஏறி வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.


இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, தனது விட்டர் பக்கத்தில் ”இது மக்கள் வாழ்விடமா? அல்லது மழைக்கால ஏரியா? இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக்கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அத்தியாவசியமான பொருட்களையும் வழங்கி வந்தேன்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.