குளிர்பானம் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி – போலீசார் விசாரணை

Scroll Down To Discover
Spread the love

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர் மாநகரப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் . இவரது மகன் லஷ்மன் சாய் அருகிலிருந்த உறவுக்காரர் சிறுவன் ஓமேஸ்வரன் உடன் இணைந்து விளையாடி இருக்கிறான். அப்போது இருவரும் வீட்டின் அருகில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருக்கிறார்கள்.

அதை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமாகியுள்ளனர். குளிர்பானம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவர்கள்மீது கெமிக்கல் வாசனை வந்ததாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர். வாசனை வந்ததோடு மட்டுமன்றி இருவரும் மயங்கியும் விழுந்தத்தால், இருவரையும் மீட்டு அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூக்கில் டியூப் வைத்த சிகிச்சை குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், அப்படி சிகிச்சையளிக்கும்போது சிறுவர்களுக்கு ரத்த வாந்தி வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக குழந்தைகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, குளிர்பானம் அருந்தியதால் இந்த நிகழ்வு நடந்ததா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குளிர்பான மாதிரிகளை சேகரித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.