Scroll Down To Discover
Spread the love

சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.42 கிலோ தங்கம், ஐ-போன்கள், சிகரெட்டுகள், மதுபானங்கள் பறிமுதல் செய்தனர்.

உளவுத் தகவல் அடிப்படையில், சார்ஜாவில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த சையது இப்ராஹிம் கனி, சாகுல் ஹமீது, ஆகியோரிடம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்கள் இருவரும் 6 தங்க பசை பொட்டலங்களை ஆசனவாயில் வைத்து கடத்தி வந்தனர். 1.48 கிலோ தங்க பசையிலிருந்து 1.29 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.66 லட்சம்.


இவர்களின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து 60 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, 3 தங்கத் துண்டுகள் 70 கிராம் எடையில் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 6.6 லட்சம். இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.72.6 லட்சம்.

இவர்களது பைகளை சோதனையிட்டபோது, 44 குடாங்கரம் சிகரெட் கட்டுகள், 11 ஐபோன்கள், 8 பழைய லேப்டாப்கள், 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.12.4 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.85 லட்சம். இவற்றை சட்டவிரோதமாக கொண்டு வந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.