பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் .!

Scroll Down To Discover
Spread the love

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மூன்று பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இருந்து ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது. இந்த கொடூரத்திற்கு காரணமானவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தினர் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை நினைத்து அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த வழக்கில் தோண்ட தோண்ட இன்னும் நிறைய தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும். பார் நாகராஜன் போல உடனே ஜாமின் கிடைக்க வழி ஏற்படுத்தி விடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.