சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ரூ 2.47 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். விமான நிலைய தனியார் ஊழியர் உட்பட மூவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

துபாயில் இருந்து எமிரேட் விமானம் ஈ கே 544 மூலமாக தங்கம் கடத்தப்படலாம் என்று வந்த உளவுத் தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்றதையும், அவர் வெளியே வந்ததற்கு பின் இன்னொருவர் அதற்குள் சென்றதையும் சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.

அந்த நபர் வெளியே வந்தவுடன் அவரை சோதனையிட்ட அதிகாரிகள், அவரது கால்சட்டைப் பைகளில் வெள்ளைப் பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்தனர். விமான நிலைய ஆணையத்தால் பணியமர்த்தப்பட்டுள்ள இன்ஃபோ சாஃப்ட் டிஜிட்டல் டிசைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளரான அவரது பெயர் நிழல்ரவி, 29, என்பது கண்டறியப்பட்டது. அவருக்கு முன்பு கழிவறைக்கு சென்ற நபர் நியமத்துல்லா ஹாதி, 35, என்று தெரியவந்தது.


அந்தப் பொட்டலங்களைத் திறந்து பார்த்த போது, அவற்றுக்குள் 3.2 கிலோ எடையுள்ள ரூ 1.66 கோடி மதிப்பிலான 24 கேரட் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, ஞாயிறன்று துபாயில் இருந்து சென்னை வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 1.57 கிலோ எடையுள்ள ரூ 81.35 இலட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அப்துல் நாசர் என்பவர் கைது செய்யப்பட்டார்மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்புள்ள 4.77 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய தனியார் ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.