போதைப்பொருள் வழக்கு : நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்கு ஆஜரானார்..!

Scroll Down To Discover
Spread the love

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரின் பெயரை நடிகை ரியா பகிரங்கப்படுத்தி உள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி நடிகை ரகுல் பிரீத் சிங் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த தீபிகா படுகோன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில் பங்கேற்பதற்காக கோவாவிலிருந்து மும்பைக்கு தனி விமானத்தில் வந்தார். கோவாவிலிருந்து கிளம்பும் முன்பு தீபிகா, சட்ட வல்லுநர்களுடன் இந்த வழக்கு பற்றி விவாதித்துள்ளதாக அறியப்படுகிறது.இதே வழக்கில் தீபிகா படுகோன் மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி விசாரணை நடத்துகிறது.அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.