ஈஷாவில் அரசு உயர் அதிகாரிகளுக்கு யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சி அரசு அதிகாரிகள் பங்கேற்பு

Scroll Down To Discover
Spread the love

இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை (DoPT), ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து, அரசு உயர் (இந்திய குடிமைப்பணி) அதிகாரிகளுக்கான யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சியை நடத்தியது.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனவரி 5 முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS) மற்றும் மத்திய அரசுப் பணிகளின் ‘குரூப் ஏ’ பிரிவை சேர்ந்த 88 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகளின் அழுத்தமான சூழல்களைத் திறம்படக் கையாளுதல், சிறந்த நிர்வாகத்திற்காக துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் தெளிவைப் பெறுதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு சத்குரு அவர்களால் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) அங்கீகரிக்கப்பட்ட 42 பயிற்சிகளில், 2015-ஆம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சித் திட்டமே அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளைத் தொடர்ந்து ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்குரு “துன்பம் குறித்த பயமே மனித ஆற்றலை முடக்குகிறது. வெளிச்சூழலில் என்ன நடந்தாலும், ஒருவருடைய உள் சூழ்நிலை மாறாமல் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால், அவர் தனது பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். மகிழ்ச்சியின் ஊற்று நமக்குள்ளேயே இருப்பதை உணர்வதன் மூலம் துன்பம் குறித்த பயத்திலிருந்து விடுதலை பெறலாம், அதுவே ஒரு மனிதனைத் தனது வாழ்வில் பெரிய அடிகளை எடுத்து வைக்கச் செய்யும்” எனக் கூறினார்.

​இந்த பயிற்சியில் கலந்து கொண்டது தொடர்பாக மகாராஷ்டிர மாநில நிலவரித்திட்டதுறை ஆணையர் சுஹாஸ் தேவசாய் கூறுகையில், “அனைவரும் ஈஷாவிற்கு வந்து இந்த யோகப் பயிற்சியை கற்றுக்கொள்ள வேண்டும். சாதி, மதம் மற்றும் இனம் கடந்து வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இந்த பயிற்சி அமைந்துள்ளது.” எனக் கூறினார்.

அதேபோன்று மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த கூடுதல் காவல்துறை தலைவர் யோகேஷ் சௌத்ரி (IPS) கூறுகையில், “இங்கு கற்றுக்கொண்ட ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி என்னுடைய ஆன்மீக மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

இந்த யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சியில் சத்குருவுடனான கலந்துரையாடல்கள், யோகாசனங்கள் மற்றும் சக்திவாய்ந்த தியான அமர்வுகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. அரசு உயர் அதிகாரிகளுக்கான இந்த பயிற்சி திட்டம், யோகக்கலை மற்றும் தலைமைத்துவ பண்புகளை இணைத்து வழங்குகிறது. இந்த பிரத்யேக பயிற்சி முகாம் தலைமை நிர்வாக பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மன சமநிலை பெறவும், தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்தி உடன் பணியாற்றுபவர்களை வழிநடத்தவும் உதவுகிறது.