வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு… தாயின் மணிக்கொடி பாரீர்… பாடலை பாடி மக்களவையில் பிரதமர் மோடி உரை

Scroll Down To Discover
Spread the love

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. வந்தே மாதரம் பாடலின் மீதான சிறப்பு விவாதத்தை மக்களவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய பிரதமர் மோடி, “வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம்; இந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டை கொண்டாடுவது நமக்கு பெருமையளிக்கும் விஷயம். சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா 150ஆவது ஆண்டு விழாவையும் நாம் கொண்டாடுகிறோம். விடுதலை வேட்கைக்கு காரணமான வந்தே மாதரம் பாடல் இந்தியர்களின் பெருமை.

வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கியிருந்தது; நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம். வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தபோது ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது. வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டின்போது நெருக்கடி நிலை இருந்தது. வந்தே மாதரம் பாடப்பட்டு 150 ஆண்டுகளில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் இருந்தன.இந்த தருணத்தில் வந்தே மாதரம் பாடலின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும்.

வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார்.

வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி, ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும்; வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து ஒலித்த போர்க்குரல் தான் வந்தே மாதரம். இந்த முழக்கம் நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் வஉசி வெளிப்படுத்தினார். அதேபோல, தமிழ் புலவர் சுப்ரமணிய பாரதி தமிழில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை மிரளச் செய்தார். ( பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக பாடினார்)

1905ம் ஆண்டு காந்தி வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசினார். மேலும், வந்தே மாதரம் பாடல் நம் நாட்டின் தேசிய கீதமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், முன்னாள் பிரதமர் நேருவால் தான் வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதம் ஆகாமல் போனது. முஸ்லிம் லீக் கட்சி வந்தே மாதரம் பாடலை வெறுத்தது. ஆனால், அந்த முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் பிரதமர் நேரு ஆதரித்தார், இவ்வாறு அவர் கூறினார்.