சபரிமலை கோயிலில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை மற்றும் 2 துவாரபாலகர் சிலைகள் ஆகியவை செம்புத் தகடுகள் என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பழுது பார்த்து திரும்பக் கொண்டு வந்தபோது 4 கிலோ தகடுகள் குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் ஒரு தனிப்படையை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே தேவசம் போர்டு விஜிலென்ஸ் எஸ்பி விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் தங்கம் திருடப்பட்டதற்கு யார் யார் பொறுப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் படி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்க தனிப்படைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை 2 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
இதில் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தவிர 2019ம் ஆண்டு தேவசம் போர்டு தலைவராக இருந்த பத்மகுமார், அப்போது சபரிமலையில் பொறுப்பில் இருந்த அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்பாபு, ஜெயஸ்ரீ, சுனில் குமார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சபரிமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தங்கத் தகடுகள் சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் தான் பழுதுபார்க்கப்பட்டன. முதலில் தங்களது நிறுவனத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட பொருட்களை பழுது பார்க்கமாட்டோம் என்று இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி கூறினார்.
Leave your comments here...