அரசு நிலத்தை ஆக்கிரமித்தாரா காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா – லோக் ஆயுக்தாவில் பாஜக புகாரால் பரபரப்பு..!

Scroll Down To Discover
Spread the love

பெங்களூரில் 1991 ஆம் ஆண்டு முதல் 12.35 ஏக்கர் காப்பு வன நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மீது பாஜக தலைவர் என்.ஆர். ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார் .

காங்கிரஸ் மூத்த தலைவரான சாம் பித்ரோடா அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர், கர்நாடக மாநிலம், பெங்களூரில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியை குத்தகை காலம் முடிந்தும், சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாக கர்நாடக பாஜ பிரமுகரும், சமூக ஆர்வலருமான என்.ஆர்.ரமேஷ், லோக் ஆயுக்தாவில் புகார் செய்து உள்ளார். சம்மந்தப்பட்ட நிலம் யெலஹங்காவில் உள்ளது.

12 ஏக்கர் கொண்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி என்று ரமேஷ் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜ பிரமுகர் ரமேஷின் குற்றச்சாட்டை சாம் பித்ரோடா மறுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிடுகையில்,எனக்கு இந்தியாவில் எந்த நிலமோ, வீடோ அல்லது பங்குகளோ இல்லை. கூடுதலாக, 1980களின் நடுப்பகுதியில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் அல்லது 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங்குடன் இந்திய அரசாங்கத்துடன் பணிபுரிந்த எனது பதவிக் காலத்தில், நான் எந்த சம்பளத்தையும் பெற்றதில்லை. மேலும், எனது 83 வருட வாழ்நாளில், இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஒருபோதும் லஞ்சம் பெற்றதில்லை என குறிப்பிட்டுள்ளார்.