நான் பாஜகவில் இணையவில்லை ; தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் .!

Scroll Down To Discover
Spread the love

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கு.க. செல்வம். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு காலமானார். இதனால், மேற்கு மா.செ. பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தி வந்தார்கள்.

இந்த நிலையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசுவை நியமித்திருக்கிறது அறிவாலயம். சீனியர்களான பகுதி செயலாளர்கள் பலர் இருக்கும் நிலையில், உதயநிதியின் சிபாரிசு காரணமாக சிற்றரசு நியமிக்கபட்டதாக கூறப்படுகிறது.இதனால், செல்வம் ஏமாற்றத்தில் இருந்தார். மூத்த நிர்வாகிகள் பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் எல். முருகனுடன், செல்வம் டில்லி சென்றார். அங்கு இருவரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.தி.மு.க.,வின் தலைமை நிலைய செயலாளராக இருந்த கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் தான் பாஜகவில் இணையவில்லை என்று பாஜக தலைவரை சந்தித்த பிறகு கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் பாஜகவில் இணையவில்லை. எனது தொகுதியில் 2 மின் தூக்கிகளை அமைப்பதற்கே டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும். தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் திமுக உட்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.