ராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்படும்..?

Scroll Down To Discover
Spread the love

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை (ஆக.,05) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில், கோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.