பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் முதியவருக்கு கொரோனா தொற்று..!!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் இன்று 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பையனபள்ளிப் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் உட்பட ஐந்து பேர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக சேவை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 5 பேரும் கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர் அப்போது மாநில எல்லையான நல்லூர் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து வருவது தெரியவந்தது இதனையடுத்து 5 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி இவர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது அதில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அந்த நபர் சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் இவருடன் ஆந்திராவில் இருந்து வந்த நான்கு பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தொடர்ந்து இவர்கள் வசிக்கக்கூடிய கிருஷ்ணகிரி பாலாஜி நகர், நல்லதம்பிசெட்டி தெரு, காவேரிப்பட்டினம் சண்முகம் செட்டி தெரு, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க படுவதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கொரோனா பாதித்த நபரின் நல்லூர் கிராமத்திற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்கு உள்ளே செல்வதற்கோ அல்லது ஊரில் இருந்து வெளியே போவதற்கோ தடை விதிக்கப்படுகிறது.