21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு : பத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் உத்தரவு.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சரக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.ஆனாலும் பல மாநிலங்களில் பத்திரிகைகள் வினியோகிக்கவும், சரக்குகள் கொண்டு செல்லவும் போலீசார் இடையூறாக இருப்பதாக புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற சரக்குகள் அனைத்தும் தடையின்றி கொண்டு செல்லப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.செய்தி பத்திரிகைகள் அச்சிடுவதற்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பத்திரிகைகள் தொடர்ந்து வினியோகம் செய்யப்படுவதை அனுமதிக்க வேண்டும். அதனை தடுக்கக் கூடாது.


அதேபோல பால் கொள் முதல் மற்றும் வினியோகம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் பொருட்கள் ஆகியவைகளையும் கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும்.மளிகை பொருட்கள், கை கழுவும் திரவம், சோப்புகள், கிருமிநாசினிகள், பேட்டரிகள், சார்ஜர்கள் ஆகியவையும் அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் செயல்படும் செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளும் அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.