ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக மேச ராசியின் குணாதிசயங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்திருக்கும்.இதேபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.

மேஷம்: மேச ராசியின் உருவம் ஆடு. ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேச ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆட்டு மந்தையைக் கவனியுங்கள்;அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேச ராசிக்காரர்களை கலகக்காரர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது.அவை நஞ்சிலும் நான்கு வாய் தின்னும்.இதனால்தான் மேச ராசிக்காரர்களை தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள். ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ எளிதில் ஏறிவிடும். ஆனால் இறங்கத்தெரியாது;இதனால் மேச ராசிக்காரர்களை விவேகமில்லாதவர்கள் என குறிப்பிடுகிறார்கள். ஆடுகளுக்கு இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் மேச ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.
ரிசபம்: ரிசப ராசியின் உருவம் மாடு.மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம்! அதாவது நமக்கு பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்படிந்து நடப்பர் என்றும்;நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது. மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது.உதாரணத்திற்கு செக்கு மாடுகளைக்கூறலாம். இதனால் ரிசப ராசியினர் மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.
மிதுனம்: மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும்.அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது போன்ற உருவ அமைப்பாகும். அதாவது சக மனிதர்களோடு சேர்ந்திருப்பதை பெரிதும் விரும்புபவர்கள் மிதுன ராசியினர். மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள்;தனிமையில் அவர்களால் இருக்க முடியாது. எப்பொழுதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் நல்ல தூதுவர்களாக செயல்படுவார்கள். மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள். எதிர்பாலார் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.
காதல் உணர்வு மிக அதிகமாக இருக்கும்!

கடகம்: கடக ராசியின் உருவம் நண்டு. நண்டு தாய்மையின் அடையாளமாகும். அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சிகளை சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம்கொண்டவர்கள் என்றும்,தன் குடும்பத்தை கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை; இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
சிம்மம்: சிம்ம ராசியின் உருவம் சிங்கம். சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இதன் காரணத்தினால் சிம்மராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுபவர்கள் எனக்கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக-எதை பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.
கன்னி: கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக-இளமையாக-கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக-கவர்ச்சியாக-இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பதைப்போல கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழலையே பெரிதும் விரும்புவார்கள்!
துலாம்: துலாம் ராசியின் உருவம் கண்களைக்கட்டிக்கொண்டு ஒரு கையில் தராசு ஏந்தி நிற்கும் பெண். தராசு பெரும்பாலும் வியாபார நிறுவனங்களிலேயே காணப்படும்! இதனால் துலாம் ராசிக்காரர்கள் வியாபார தந்திரம் உடையவர்கள் என்றும்,எதையும் சீர்தூக்கிப்பார்த்து திறம்பட செயல்படக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசியின் உருவம் தேள். தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது சிரமமாகவே இருக்கும். இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி-பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
தனுசு: தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் ,இந்தராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனித தன்மையை வளர்த்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக்கொல்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது,இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்திசெல்வார்கள் எனக்கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாக குறிபார்க்க முடியும்,இதன் காரணத்தால் தனுசுராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். தர்மர்த்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர்,இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்.

மகரம்: மகர ராசியின் உருவம் முதலையாகும். முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்,ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்,கிடக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.பொறுமை இவர்களுக்கு அதிகம்.
கும்பம்: கும்ப ராசியின் உருவம் பானயை தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும். பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும். இதனால்,கும்ப ராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.அதாவது இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
மீனம்: மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை, இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதை பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
                                     Astrologer 
                                  Sri Gopala Krishnan

														
														
														
Leave your comments here...