அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்குவதை முன்னிட்டு, ராமர் சிலை இடமாற்றம்

Scroll Down To Discover
Spread the love

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்த நிலையில், கோவில் கட்டுமான பணிகளுக்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோவில் கட்டுவதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

இதற்காக, தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலை, அருகில் உள்ள பகுதிக்கு மாற்றும் நிகழ்ச்சி, நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடைபெற்றது. ராமஜென்மபூமி கோவில் கருவறையில் இருந்து, 27 ஆண்டுகளுக்குப் பின், ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.


கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்நிகழ்ச்சி யில், முதல்வர், யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலர், சம்பத் ராய் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்றனர். தற்போதைய கோவிலில் இருந்து, முதல்வர், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நால்வர், ராமர் சிலையை பல்லக்கில் சுமந்து சென்று, புதிய இடத்தில், 9.5 கிலோ எடையுள்ள, வெள்ளி சிம்மாசனத்தில் வைத்தனர். பின், முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.பின், ராமர் கோவில் கட்டுவதற்கு, ஆதித்யநாத் தன் சொந்தப் பணத்தில் இருந்து, 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.