15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!

Scroll Down To Discover
Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிப்பதாக ஜாட் சமூகத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது சர்ச்சையை எழுப்பி உள்ளது.

காசிப்பூரில் கடந்த 21-ம் தேதி அன்று நடைபெற்ற சமூக அளவிலான பஞ்சாயத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் “ஜனவரி 26 முதல் பின்மால்-கான்பூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் கேமரா வசதி கொண்ட செல்போன்களை திருமணம், பொது நிகழ்வு மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குச் செல்லும்போது கொண்டு செல்லக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுத்ரி குலத்தின் சுந்தமாதா பட்டி பஞ்சாயத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்களுடன் விவாதித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல். இதன்மூலம், அதிக நேரம் போனை பயன்படுத்துவது மற்றும் சிறுவர்கள் மொபைல் போனுக்கு அடிமையாவது குறையும் என அந்த பஞ்சாயத்தின் நிர்வாகிகள் நம்புகின்றனர்.
காசிப்பூர், பவாளி, கல்டா, மனோஜியவாஸ், ரஜிகாவாஸ், தட்லவாஸ், ராஜ்புரா, கோடி, சித்ரோதி, அல்டி, ரோப்சி, கனத்வால், சவிதார், ஹத்மி கி தானி மற்றும் கான்பூர் ஆகிய கிராமங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.