ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி ..!

Scroll Down To Discover
Spread the love

ஜம்மு – காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட ‘இசட்’ வடிவ சுரங்கப் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.,13) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஜம்மு – காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் ‘இசட்’ வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் – லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், 2,700 கோடி ரூபாய் செலவில் 6.5 கி.மீ., நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இசட் வடிவ சுரங்கப் பாதை, கடல் மட்டத்திலிருந்து 8,652 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இருவழிப் பாதையாக, தலா 10 மீ., அகலம் கொண்ட சிக் – சாக் வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்ல முடியும். அவசர காலத்தில் உதவும் வகையில், இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீ., அகலத்தில் மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சுரங்கப்பாதையாகவும் இதை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு, நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க முறையில், இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சோனாமார்க் நகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.,13) நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களை பாராட்டினார்.